மதுரையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக மதுரைக்கு வந்து சென்னை திரும்புவோருக்கு முறையான பேருந்து வசதி செய்யாததால் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்களிடையே கேட்ட போது “விடுமுறையை முடித்த பின்னர் ஊருக்குத் திரும்பும் பயணிகளுக்கு ஏற்றார்போல் பேருந்து வசதி இயக்கப்படவில்லை எனவும் பயணிகளை முறையாக வரிசைப்படுத்தி அனுப்பவில்லை எனவும் பொதுவாக விடுமுறையை கழித்த பின்னர் சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிக கூட்டநெரிசல் ஆக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பேசிய சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறியதாவது “மதுரை மாவட்டத்தில் இருந்து 80 பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்பட்டும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் தமிழ்நாடு அரசு இதை முன்பே திட்டமிட்டு பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திட்டமிட்டு இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்