குறைந்த மக்கள்தொகை உள்ள பகுதிகளுக்கும் எந்தவித லாப நோக்கமின்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்ட பேரவை கூட்ட தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்பட்டும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் நிர்வாகத் திறன் இருந்திருந்தால் நஷ்டத்திலிருந்து மீட்டுவிடலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கர், திமுகவிற்கு நிர்வாகத் திறன் இருந்திருந்தால் ஆட்சியை விட்டு செல்லும் பொழுது லாபத்தோடு போக்குவரத்து துறையை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும், பேருந்து கட்டண அதிகரிப்புக்கு டீசல், ஊழியர்களின் ஊதிய உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மீண்டும் பேசிய திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், அண்மையில் கிராமசபை கூட்டத்தில் பெரும்பாலானவற்றில் பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து எழுந்ததாக தெரிவித்த அவர், பல வழித்தடங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் பயன்பாடு இல்லாத வழித்தடங்களில் மட்டுமே ஓரிரு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது என்றார். மேலும் ஆயிரம் குடியிருப்புகள் இருந்தால் மட்டுமே பேருந்துகள் இயக்கபட வேண்டும் என்ற விதி இருந்தாலும், 500 மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும் எந்த லாப நோக்கமும் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.