காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற இளைஞர் மாநகர பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய பானுமதி. இவர் வீட்டின் அருகே 33 வயதுடைய சதீஷ்குமார்பிளம்பராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் பானுமதி வீட்டின் மீது கற்களை வீசி உள்ளார். இதனையடுத்து பானுமதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் சதீஷ்குமாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்து வெளியே ஓடி வந்த சதீஷ் குமார் நாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தின் முன் பாய்ந்தார். இதில் சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காவலருக்கு பயந்து காவல் நிலையத்தில் இருந்து வெளியே ஓடிவந்து விபத்தில் சிக்கினாரா என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் சதீஷ்குமாரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது . பின்பு காவல் துறையினர் அவரது குடும்பத்தினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.