முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் இந்த போராட்டம் கட்டாயம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதில் அரசியல் கட்சியினர் மற்றும் பிரபல நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது. மேலும் பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் மின்சாரரயில்கள் வழக்கம்போல இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.