வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1,350 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வழக்கம்போல நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த 1,350 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து சேலம், கொங்கணாபுரம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, அவிநாசி, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றுள்ளனர். மேலும் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 8,050 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆர்.சி.எச். பருத்தி 7,400 ரூபாய் முதல் 8,022 ரூபாய் வரையிலும். கொட்டு ரக பருத்தி 3,899 முதல் 5,899 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 38 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.