செங்கல்பட்டு அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி பகுதியை அடுத்த கடம்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மேத்யூ. இவர் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள முரளி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மேத்யூவின் மகன்களான ரமேஷ், ஆகாஷ் ஆகிய இருவரும், முரளியின் மகன் தரனேஷ் என்பவருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் ஊர் முழுக்க தேடினர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் குளத்தில் 3 சிறுவர்களின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ந்து போய் ஊர் மக்களுக்கும் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்தார்.
பின் அங்கு சென்ற அதிகாரிகளும் மக்களும் 3 சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இறந்தது ஆகாஷ்,ரமேஷ், தரனேஷ் என்பது தெரிய வரவே பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு பதறியடித்தபடி மருத்துருவமனைக்கு வந்த பெற்றோர்கள் குழந்தைகளின் உடலை கண்டு கதறி அழுதனர். தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.