உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய வர்த்தக தொழில் தறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய வர்த்தக தினத்தையொட்டி, நடைபெற்ற டிஜிட்டல் உரையில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியபோது, “பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். எதிரி நாடுகளிடமிருந்து வரும் தரமற்ற பொருட்களை வாங்க வைத்து மக்களை ஏமாற்றும் வர்த்தகர்களை நாம் அடையாளம் காண வேண்டும். மேலும் ஆத்மா நிர்பர் பாரத் பிரச்சாரத்திற்கு வர்த்தகர்கள் முழுமையாக பங்களிக்க வேண்டும். சுயசார்பு திட்டத்தின் கீழ் தரமான பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்.
உள்நாட்டு பொருட்களின் விற்பனையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன் மக்கள் தரமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கவும் முடியும். இந்த உள்நாட்டு தயாரிப்பால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகும். மேலும் பணப்புழக்கம் அதிகரிப்பதால் மக்களிடம் வாங்கும் திறனும் அதிகரிக்கும். ரூ 10 லட்சம் கோடி மதிப்பிலான வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள், உள்நாட்டிலேயே தயார் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் விரைவில் ஒரு தேசிய வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.