கலிபோர்னியாவில் அதிவேகமாக பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க 2000 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சியரா நெவாடாவை சுற்றி பயங்கரமான காட்டுத்தீ பரவி வருகிறது. தற்போது இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே தீயை அணைக்கும் முயற்சியில் 2000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த வாரம் காட்டுத் தீயானது பல வீடுகள் உள்பட 2 வணிக கட்டடங்களை எரித்து சாம்பலாக்கியது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.
மேலும் 16 சதுர மைல்கள் மட்டுமே பரவிய தீயானது 24 மணி நேரத்தில் 143 சதுர மைல்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த தகவலை சீக்வோயா தேசிய வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது 2000 குடியிருப்புகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வணிக கட்டிடங்கள் காட்டுத் தீக்கு இரையாகும் அபாயத்தில் உள்ளது.
குறிப்பாக கலிபோர்னியாவில் பல மில்லியன் மரங்கள் காட்டுத் தீயில் அழிந்துள்ளது. மேலும் வானிலை மாற்றத்தால் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் அதிகளவில் வெப்பமும் வறட்சியும் காணப்பட்டு வருகின்றன. இந்த வானிலை மாற்றங்களே காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருக்கின்றது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.