பத்திரிகைகளில் கூறுபடுவது போல நான் ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். அப்பொழுது அவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து சில மணி நேரங்கள் கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறபப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அந்த அறிக்கையில் ‘ரஜினியை நான் பார்த்தது உண்மைதான். ஆனால் அது ஒரு தனிப்பட்ட விஷயம். அதில் எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லை. பத்திரிகைகளில் கூறுவது போல் நான் ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை.
சுமார் அரை மணி நேரம் நாங்கள் கலந்துரையாடினோம்.
ரஜினியை சந்திக்க சென்றதும் அவரது அலுவலகத்தில் பாபாஜியின் படமும், ராமகிருஷ்ண பரமகம்சரின் படமும், யோகாநந்த பரமகம்சரின் படமும், எம் நாட்டு சுவாமி சச்சிதானந்த யோகியின் படமும் சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்தன.
இதில் ரஜினி குறித்து பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. ஜப்பான் போன்ற பல்வேறு நாட்டு மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்படக் கலைஞர் ரஜினி ஆவார்.
மேலும் எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்கும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராவார்.
ரஜினியை சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொள்ளமுடிந்தது. அந்தச் சிறந்த மனிதரின் சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன்.’