முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியானது தொடங்கிவிட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் மான்கள், புலிகள், காட்டெருமைகள், காட்டு யானைகள், கரடிகள், சிறுத்தை புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் பருவ மழைக்கு முன்பு மற்றும் அதற்கு பின்பு உள்ள காலங்களில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில் புலிகள் காப்பகத்தின் உள் மண்டலப் பகுதிகளான கார்குடி, தெப்பக்காடு மற்றும் முதுமலை போன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் ஒரு வாரத்திற்கும் மேலாக புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளி மண்டல பகுதிகளான சீகூர், தெங்குமரஹாடா, சிங்காரா போன்ற இடங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அங்கு உள்ள பகுதிகளில் வனத்துறையினர் 400 கண்காணிப்பு கேமராக்களை சுமார் 200 இடங்களில் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனச்சரகர் காந்தி என்பவர் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் வன விலங்குகள் போல் நடந்து அதில் உருவங்கள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்கின்றனர். இந்த கண்காணிப்பு கேமராவானது ஒரு வாரம் வன விலங்குகளின் நடமாட்டத்தை பதிவு செய்த பின்னர் புலிகள் நடமாட்டமானது எந்த இடங்களில் அதிகமாக உள்ளது என்பதை வனத்துறையினர் ஆராய்ந்து புலிகள் மற்றும் வன விலங்குகள் எண்ணிக்கையை கணக்கிடுவர்.