கனடா நாட்டிற்கு புலம்பெயர்ந்த ஒரு பெண் தான் எதிர்கொண்ட ஏமாற்றங்களை கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டிலிருந்து, அதிக கனவுகளோடு கடந்த 2015 ஆம் வருடத்தில் கனடாவிற்கு தன் குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருக்கிறார் மிஸ்பா நூரின். இவரின் கணவர் பாகிஸ்தான் நாட்டில் பிரபலமான ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்திருக்கிறார். எனினும், கனடா நாட்டில் கட்டிடங்களில் கார்பெட் போடும் வேலை தான் அவருக்கு கிடைத்தது.
இது குறித்து மிஸ்பான் கூறுகையில், குழந்தைகளுக்காக வேறு வழியின்றி அந்த வேலையில் இருந்த தன் கணவர், மூட்டுகளில் வலி, கைகள் காய்ச்சி, படிகளில் ஏறி இறங்கி மிகவும் சோர்வடைந்து வீடு திரும்பியதை கண்டவுடன் ஏன் கனடா வந்தோம்? என்று நொந்து போனேன். வசிக்கும் குடியிருப்பில் தேவையான மேசை, நாற்காலி போன்ற எதுவும் இன்றி, தாய் நாட்டை உறவினர்களை பிரிந்து கனடாவிற்கு வந்து, அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற பயத்துடன் வாழ்க்கையை தொடர்ந்ததாக கூறியிருக்கிறார்.
மேலும், எனக்கு வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். ஒரு புறம் மன அழுத்தம், பணத்தை சேமிப்பதற்காக ஒவ்வொரு நாளும் குறைந்த அளவில் சாப்பிடுவது மறுபுறம் என்று சுமார் 10 கிலோ எடை குறைந்துவிட்டேன். இப்படியே இரண்டு வருடங்கள் கடந்தன. அப்போது என் மகன் பயின்ற பள்ளியில் மதிய உணவு மேற்பார்வையாளர் பணி இருப்பதாக கூறினான்.
உடனடியாக அந்த பள்ளிக்கு சென்று தன் பட்ட படிப்பு, ஆசிரியை பணியில் இருந்த அனுபவம் பற்றி கூறி அந்த பகுதி நேர பணியை வாங்கினேன். அதன்பின், தன் கணவருக்கு ஃபோர்க் லிப்ட் ஆபரேட்டர் பணி கிடைத்தது. பல்வேறு சிரமங்களை கடந்து இருவரும் பதவி உயர்வு பெற்று தற்போது ஒரு வீட்டை வாங்கியதாக கூறியிருக்கிறார்.
எனினும் தான் இவ்வளவு நாட்களாக அடைந்த துன்பங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் தனக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், தன் கணவருக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சத்து, நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலையை அடைந்து விட்டாலும், உடல் ரீதியாக அதிகம் பாதிப்படைந்து விட்டதாக கூறியுள்ளார். காலத்தை பின்னோக்கி நகர்த்தினால், புலம்பெயர்வது பற்றி இன்னொரு முறை சிந்தித்திருப்பேன். நாங்கள் எதிர்பார்த்தது போன்று இது எளிதாக இல்லை, மிகவும் சிரமமானது என்று கூறியுள்ளார்.