அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடும் பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரமாக இருக்கிறது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கூறியிருக்கிறார்.
கனடா நாட்டிலிருந்து எல்லை பகுதி வழியே அமெரிக்க நாட்டிற்குள் நுழைய முயற்சித்த இந்தியர்கள் 5 பேரை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ஒரு நபர் எங்களை அழைத்து வந்ததாக தெரிவித்தனர். மேலும், 11 மணி நேரங்களாக நடந்து வந்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
பலியான 4 பேரும் இவர்களுடன் வந்திருக்கலாம் எனவும் இரவு நேரம் என்பதால் அவர்கள் வழிமாறி சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே பலியான 4 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மனித கடத்தல் வழக்கில் ஒருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ இதுபற்றி கூறுகையில், “என் நிர்வாகம் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் சேர்ந்து மனித கடத்தலை தடுக்க முயன்று வருகிறோம். பலியானவர்களின் கதையை கேட்கும்போதே மனம் பதறுகிறது. மனித கடத்தலால் ஒரு குடும்பம் இவ்வாறு உயிரிழப்பது பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.