கனடாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் ஹோட்டலில் மூன்று நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கொரோனா பரிசோதனையை அவர்களுடைய சொந்த செலவிலேயே செய்ய வேண்டும் என்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .
புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்ட்டின் ட்ரூடோ,” கனடாவிற்கு வரும் பயணிகள் கட்டாயம் மூன்று நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுடைய சொந்த செலவில் பிசிஆர் என்றழைக்கப்படும் கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அந்த சோதனையில், பரிசோதனை செய்யும் நபருக்கு முடிவு எதிர்மறையாக வந்தால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு பத்து நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார். அப்படி இல்லாமல் நேர்மறையான முடிவு வந்தால் அவர்கள் கனடா அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். கனடாவில் வாழும் மக்கள் மீது பொது சுகாதார அதிகாரிகள் கொண்டுள்ள அக்கறை காரணமாக இந்த முடிவானது ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் கனடாவிற்கு வர இருக்கும் விமானங்கள் மாண்ட்ரீல், டொரண்டோ, கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் தரையிறக்கப்டும் என்றும் கூறியுள்ளார். அப்படி தரையிறக்கப்படும் விமானங்களில் இருக்கும் பயணிகள் அவர்களின் சொந்த செலவில் கட்டாயம் கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.