ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் சாலையில் கிடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் டொராண்டோ என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரப்பகுதி சாலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் விழுந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் “நாங்கள் கனடாவில் உள்ள அடிலெய்ட் மற்றும் டங்கன் தெருக்களில் பணியில் இருந்த போது அதிகாலையில் துப்பாக்கி சத்தம் காதில் கேட்டது. இதனையடுத்து நாங்கள் உடனடியாக என்னவென்று தெரியாமல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது வழிப்பாதையில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் விழுந்து கிடந்தனர். பின்னர் நாங்கள் மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி துப்பாக்கியால் சுடப்பட்ட ஆண் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த ஆணின் விவரம் தற்போது வரை தெரியவில்லை. ஆனால் அவருக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும் என கருதுகிறோம். இதனைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட மூன்று பேரும் உறவினர்களாக இருக்கலாம் என நம்புகிறோம். மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த அந்தப் பகுதியிலிருந்து ஒரு வாகனம் வெளியேறியுள்ளது” என கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் சாலைகளை மூடி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை சந்தேக நபர் குறித்த எந்தவித செய்தியும் வெளியாகவில்லை.