பிரிட்டன் இளவரசர் ஹரி இக்கட்டான சூழ்நிலையில் தனது தாய் டயானா விட்டு சென்ற பணம் தான் கை கொடுத்தது என்று கூறியுள்ளார்.
ஓப்ரா வின்ஃப்ரேக்கு பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியில் இளவரசர் ஹரி கனடாவிலிருந்து தாங்கள் எதற்காக வெளியேறினோம் என்பது குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் ஹரி கூறியதாவது, “நான் முதன்முதலில் அரச குடும்ப பதவியில் இருந்து விலகிய போது எனக்கு அந்த குடும்பத்தில் இருந்து யாருமே எனக்கு நிதியுதவி அளிக்க வில்லை. அனைவருமே நிதி அளிப்பதை நிறுத்திவிட்டனர்.
இருப்பினும் நான் ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் பாதுகாப்பு காரணமாக நான் கனடாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு சென்று குடியேறினேன். அந்த இக்கட்டான சூழலில் என் தாய் டயானா விட்டுச்சென்ற பணம் தான் எனக்கு கை கொடுத்தது. எங்களுக்கு இதுபோன்று தொலைக்காட்சிகளில் பங்கேற்பதற்கான திட்டம் எதுவுமே இல்லை. எனது நண்பர் ஒருவர் தான் இது போன்று தொலைக்காட்சி பங்கேற்கலாம் என்று ஆலோசனை கூறினார்.
எனவே நாங்கள் பணத்திற்காக இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இனி பங்கேற்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் கனடாவை விட்டு அமெரிக்காவிற்கு குடியேறியபோது, அமெரிக்க நடிகர் Tyler Perry தான் எங்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தார். மேலும் எங்கள் பாதுகாப்பிற்கான செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார்” என்று ஹரி கூறியுள்ளார்.
அப்போது மேகன், “ஹரி அரண்மனையை விட்டு வெளியேறியதால் அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு நான் அரண்மனைக்கு கடிதம் எழுதினேன். அதில் ஹரியின் பாதுகாப்பை நீங்கள் தொடர வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால் அரண்மனையிலிருந்து அதற்குச் சாத்தியமே இல்லை என்று எனக்கு பதில் அளித்து விட்டனர் “என்று கூறியுள்ளார்.