“ஒமிக்ரான்“ அச்சுறுத்தல் காரணமாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் 10 நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“ஒமிக்ரான்” அச்சுறுத்தல் காரணமாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் எகிப்து, Malawi, நைஜீரியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 10 நாடுகளை சேர்ந்தவர்கள் கடந்த 14 நாட்களில் கனடா நோக்கி பயணித்தவர்களாக இருப்பின் அந்நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் மற்றும் கனேடிய குடிமக்கள் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பும் பட்சத்தில் பிசிஆர் முறையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு ஒன்றை கனடாவிற்கு நுழைவதற்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
அதோடு மட்டுமில்லாமல் கனடாவிற்குள் நுழைந்த பின்னர் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகள் தவிர மற்ற அனைவரும் கனடா விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகும் வரை பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் நிரந்தர வாழிட உரிமம் மற்றும் கனேடிய குடிமக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தாலும் இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது. அதாவது நவம்பர் 26 அன்று “ஒமிக்ரான்” தொற்று மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா, Lesotho, Eswatini, Botswana, Namibia, Mozambique, Zimbabwe உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு இந்த “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.