நிலத்தை வாங்கிவிட்டு தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் நில உரிமையை சப்-கலெக்டர் ரத்து செய்தார்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ரத்தினவேலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ரத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை தானம் செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் தனது இளைய மகனாகிய ஆனந்த் என்பவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆனந்தும் அவரது மனைவியும் ரத்தினவேலுவை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தந்தை நாகப்பட்டினம் மாவட்டம் சப்-கலெக்டர் பழனிகுமார் என்பவரிடம் புகார் மனு அளித்தார். இதனையடுத்து சப்-கலெக்டர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்படி செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்யுமாறு பத்திரப்பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். இதன்படி ரத்தினவேலு ஆனந்திற்கு எழுதிக் கொடுத்த நில உரிமை ரத்து செய்யப்பட்டது.