நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சஞ்சய் தத்துக்கு சென்ற 9-ம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் நலம் பெற்று திரும்பி வர வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே, சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது.
புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து அவர் தனது வீட்டிலிருந்து புறப்படும் முன் கூறுகையில், “எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என தெரிவித்தார். சஞ்சய் தத் முகக்கவசத்துடன் வீட்டிலிருந்து வெளியேறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.