திமுகவின் விக்கிரவாண்டி தொகுதியின் வேட்பாளர் பெயரை முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக நேற்று விருப்ப மனு அளித்தது.
இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்.பியுமான கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் புகழேந்தி, ரவிதுரை, இராஜாராம், தங்கராசன் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர். நேற்று மாலை 6 மணியுடன் விருப்பமனு வழங்கும் அவகாசம் நிறைவடைந்தது.
இந்நிலையில் விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின், முக அழகிரி உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர். இதில் திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தியை (வயது 66) வேட்பாளராக முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2016 இல் நடந்த தேர்தலின் போதே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர் புகழேந்தி என்பது குறிப்பிடத்தக்கது.