சுற்றுப்புறசூழலை பாதிக்காத தொழிற்சாலையை உருவாக்குவேன் என்று தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி அவ்வப்போது தனது கருத்துக்களையும் பரப்புரைகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பின்மை பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முந்தைய சொற்பொழிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என வாக்குறுதி அளித்தார் . ஆனால் தனது தேர்தலுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆட கூடிய நிலையை நாம் சந்தித்திருக்கிறோம் . கிட்டத்தட்ட 6.1% வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையை அவர்கள் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளார்கள்.
திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டம் மூலம் மக்களை நேரடியாகச் சந்தித்த போது ஒவ்வொரு படித்த இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலையில்லா சூழ்நிலை நிலவுவது கண்கூடாக பார்க்க முடிந்தது . இந்த மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகளை கொண்டுவந்து தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கி படித்தவர்களுக்கு இளைஞர்களுக்கு இளம்பெண்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர கூடிய நிலையை திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கும் என தெரிவித்தார் .