அரியலூர் மாவட்டத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வுசெய்யப்பட்டவர்கள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்திற்குள்பட்ட ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள முதலாவது வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள முதலாவது வார்டுக்கு ராமன், உலகநாதன், சரண்யா ஆகிய மூன்றுபேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ராமன் என்பவர் தனது வேட்புமனுவில் வாக்காளர் பெயர்பட்டியலில் தனது பெயர் பாகம் எண் 1 வரிசை எண் 98 என்று எழுதி, அதற்கான பட்டியலையும் இணைத்து வழங்கியுள்ளார்.
அப்பகுதிக்குத் தேர்தல் அலுவலராக இருந்த பவுனம்மாள் என்பவரும் ஆய்வுசெய்து அவரது மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்குச் சென்ற ராமன் தனது வாக்கையும் பதிவுசெய்துள்ளார்.
அங்கிருந்த ராமன் இது குறித்து தேர்தல் அலுவலரிடம் முறையிட்டபோது வாக்காளர் பட்டியலிலிருந்து ராமன் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் உத்தரவு பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதனால் குழப்பம் நிலவிவருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமன், “எனது மனுவை ஏற்றுக்கொண்ட பின்புதான் வாக்களித்துள்ளேன். இதன் பிறகு வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனைக் காரணமாகக் காட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறாதது எனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
நான் இதே கிராமத்தில் வசிக்கிறேன் என்பதற்கு வரி ரசீது, மின்கட்டண ரசீது உள்ளிட்டவற்றையும் இணைத்து வழங்கிய பிறகும் இவ்வாறு கூறியுள்ளதால் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளேன்” என்றார்.
தற்போது ஸ்ரீபுரந்தான் கிராம ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள உலகநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதலாவது வார்டு உறுப்பினரின் மனு ஏற்கப்பட்டு தற்போது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது அலுவலர்களின் குழப்பத்தால் நடந்துள்ளது. நாளை மறுநாள் அனைவரும் பதவி ஏற்றபிறகு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்தலை நடத்தமுடியமா என்பதும் குழப்பமாகவே உள்ளது” என்றார். 10ஆம் தேதிக்குள் குழப்பத்திற்கு தீர்வுகான வேண்டும் என்பதே ஸ்ரீபுரந்தான் பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.