Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா  விற்பனை  போட்டி …. 10 மாதங்களுக்கு பின் எலும்பு  துண்டுகள் கண்டெடுப்பு..!

பத்து மாதங்களுக்குப் முன்பு நண்பர்களால் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டவரின் எலும்பு துண்டுகளை கண்டெடுத்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கரிகாலன் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (21). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவரை காணவில்லை என்று அவரது தந்தை தனசேகர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல மாதங்களாக லோகேஷ்யை தேடிவந்த நிலையில், நேற்று இரவு அனகாபுத்தூர் பகுதியில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா அடித்து ரகளையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவருக்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ”லோகேஷை கொலை செய்தது போல் உன்னையும் கொலை செய்து விடுவேன்” என்று பேசினர். இதைக் கேட்ட அப்பகுதியினர், சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து விரைந்து சென்ற சங்கர் நகர் காவல் துறையினர், ஐந்து பேர் கொண்ட கும்பலை பிடிக்க முயன்றபோது மூவர் தப்பி ஓடினார். பிடிபட்ட பிரவீன் (23), நித்திஷ் (24) இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் காணாமல் போன லோகேஷின் நண்பர்கள் என்பது தெரியவந்தது.

இருவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுப்பாலம் அருகே உள்ள முள் புதரில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தபோது, லோகேஷுடன் தகராறு ஏற்பட்டதால் அவரை அடித்துக் கொலை செய்து சாக்குப் பையில் கட்டி விமானப் படைக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்துக்கு சென்ற காவல் துறையினர், கிணற்றில் இருந்த லோகேஷின் சடலத்தை மீட்க தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் லோகேஷின் சிறு சிறு எலும்பு துண்டுகள் மட்டுமே கிடைத்தன.

மேலும் இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பல்லாவரம், அனகாபுத்தூர் போன்ற புறநகர் பகுதிகளில் பல மாதங்களாகவே இரண்டு பிரிவினர்களாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும், அதில் போட்டி ஏற்பட்டதால் திட்டமிட்டு லோகேஷை கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

 

 

Categories

Tech |