செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினுடைய அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை அறிக்கை மனுஷ்மிருதி என்று சொன்னால், அது மிகையாகாது. மனுஷ்மிருதியில் சொல்லப்பட்டவற்றையே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, கலாச்சார கொள்கையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்கள் இங்கே மீண்டும் நிலை நிறுத்த விரும்புவது மனுஷ்மிருதி கட்டமைத்த சமூக அமைப்பையே ஆகும்.
சமூகநீதி கூடாது, சுதந்திரம் கூடாது, சகோதரத்துவம் கூடாது, சமத்துவம் கூடாது என்பதுதான் மனுஷ்மிருதியின் அடிப்படை கருத்தியல் ஆகும். அதனையே தம்முடைய அரசியல் கோட்பாடாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ். ஆர்எஸ்எஸினுடைய அரசியல் பிரிவு தான் பிஜேபி. பிஜேபி என்கின்ற அரசியல் இயக்கம் இருக்கின்றபோது தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கான அவசியம் என்ன வந்தது ?
ஏன் ஆர் எஸ் எஸ் இங்கே தனியே பேரணி நடத்த வேண்டும்? உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு, அவர்களால் பதில் சொல்ல முடியாமல் இன்றைக்கு பின்வாங்கி ஓட்டம் எடுத்து இருக்கிறார்கள். பேரணியில் கலந்து கொள்கிறவர்கள் ஆதார் அட்டைகளை காண்பிக்க வேண்டும், பேரணியில் கலந்து கொள்கிறவர்கள் ஆர்.எஸ்.எஸ்காண உறுப்பினர் அட்டைகளை வழங்க வேண்டும், பதிவு செய்யப்படாத அமைப்புகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கென்று தனியே ஒரு அலுவலகம் இல்லை, அடையாளம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமுறைவு இயக்கத்தை போல, ஒரு பயங்கரவாத பாசிச அமைப்பாக ஆர்எஸ்எஸ் இயங்குகிறது என்பதை, நாட்டு மக்களுக்கு உயர்நீதிமன்றமே அம்பலப்படுத்தி விட்டது என தெரிவித்தார்.