மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணிக்கு மாநில பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொள்ள மாநில தலைவர் திலீப் கோஸ் வந்திருந்தார். அப்போது காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “நந்திகிராமில் அமைதிப் பேரணி நடத்த கடந்த 15 தினங்களுக்கு முன்பே காவலர்களிடம் அனுமதி கோரியிருந்தோம். இதுதொடர்பாக அவர்களுக்கு முறைப்படி எழுத்துப்பூர்வ கடிதமும் அளித்தோம். எனினும், அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். எந்தவித காரணமும் இன்றி கட்சித் தொண்டர்கள் மீது அவர்கள் தடியடி நடத்தினர்.
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். ஆனாலும் எங்களுக்கு அனுமதி மறுத்து, தாக்குதல் தொடர்கிறது. நந்திகிராம் பகுதிக்குள் செல்வது உறுதி. அங்கு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணி நடக்கும். எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியது தவறு. எங்களிடம் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நினைத்திருந்தால் காவலர்களின் தடுப்பை உடைத்திருக்கலாம். இருப்பினும், அது எங்கள் நோக்கமல்ல. மேற்கு வங்கத்தில் சர்வாதிகார ஆட்சி நடந்துவருகிறது. அந்தச் சர்வாதிகார ஆட்சியை உடைப்பதே எங்களின் நோக்கம்” என்றார்.
பாஜக மாநிலத் தலைவரின் குற்றஞ்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் பதிலளிக்கையில், “அவர்கள் (பாஜகவினர்) சட்டத்தைப் பின்பற்றினார்களா? அல்லது மீறினார்களா? என்று பார்க்க வேண்டும்” எனக் கூறினார். மேலும், பாஜகவினர் காவலர்களின் தடுப்பை உடைத்தனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி மலர அடித்தளமிட்டது நந்திகிராம் போராட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.