தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் ராஜமகேந்திரன் வசித்து வந்துள்ளார். மின்வாரிய அலுவலகத்தில் களப்பணியாளராக பணியாற்றிவரும் இவருக்கு காமேஷ் பிரபு(17) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு காமேஷின் நண்பர் கமயக்கவுண்டன்பட்டியை சேர்ந்த நவீன்(17) என்பவர் வந்துள்ளார். இதனையடுத்து காமேஷ் பிரபு மற்றும் நவீன் அவர்களது வீட்டிற்கு அருகே உள்ள முல்லை பெரியாறு பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காமேஷ்பிரபு ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது மிகவும் ஆழமாக பகுதிக்கு சென்ற காமேஷ் பிரபு ஆற்றில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நாவீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காமேஷ் பிரபுவை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனாலும் சிறுவனை மீட்க முடியாத நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிட பட்டுள்ளதால் உடனடியாக காவல்துறையினர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியுள்ளனர். இதற்குப்பின் காவல்துறையினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் காமேஷ் பிரபுவை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது முல்லைப்பெரியாறு 18-ஆம் கால்வாய் தடுப்பணையில் இருந்து காமேஷ் பிரபுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனின் உடலை கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறைவிற்காக அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.