விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தேமுதிக அறிவித்துள்ளது.
வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.
அதே போல ஆளும் கட்சியான அ.தி.மு.க சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வி.நாராயணனும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நா.புகழேந்தியும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரனும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இருந்து வரும் நிலையில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்து வருகின்றார். முடிந்த மக்களவை தேர்தலிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்யவில்லை. இதையடுத்து கட்சி வருகின்ற 19_ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.