சாலை விபத்தில் தந்தை, மகன் இருவரும் குடும்பத்தாரின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சூர்யா நகர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குமாரபட்டிக்கு புறப்பட்டனர். அப்போது ஒரே காரில் தந்தை, மகன் இருவரும் சென்றனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மற்றொரு காரில் பின்னால் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பாண்டியன் ஓட்டி வந்த காரானது மணப்பாடி அருகே வந்தபோது, நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியதோடு, அந்த வழியாக வந்த லாரி மீதும் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை பார்த்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கொட்டாம்பட்டி தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களின் உடல்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.