கட்டுப்பாட்டை இழந்த காரானது கவிழ்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சந்துரு என்ற கல்லூரி படிக்கும் மாணவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுவுக்கு சொந்தமான காரில் இவர்கள் இருவரும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பிரபு ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரானது பரமத்திவேலூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி கார் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பிரபு பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.