கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் சிவகுமார் என்ற தமிழர் விடுதலைக் களம் என்ற அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகி வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளை கால் பகுதியில் வசித்து வரும் ஹரிஹரசுதன் என்ற நண்பர் இருக்கின்றார். இவர் அக்கட்சியின் ஒன்றிய இளைஞரணி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் தென்காசி மாவட்ட செயலாளர் கட்டபொம்மன் மற்றும் நிர்வாகிகள் மதன், மகேந்திர குமார் போன்றோருடன் ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து ஆலங்குளம் தொட்டியாங்குளம் பகுதியில் இருக்கும் திருப்பத்தில் இவர்களது கார் திரும்பும் போது, பழைய எந்திரத்தின் இரும்பு பாகங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் இருந்த இரும்பு பாகங்கள் எதிரே வந்த கார் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் காரில் முன்புறம் இருந்த ஹரிஹரசுதன் மற்றும் சிவக்குமார் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து உயிருக்குப் போராடும் நிலையில் இருந்த மீதமுள்ள 3 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான மன்னார்குடி பகுதியில் வசிக்கும் மோதிலால் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.