கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்ததில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் திருநகர் பகுதியை சேர்ந்தவர் விவேக்சர்மா. இவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்று விவேக் சர்மா தனது அக்கா விக்டோரியா, அக்காவின் கணவர் குமரேசன் மற்றும் தாய் வேளாங்கண்ணி ஆகியோருடன் சேர்ந்து தனது காரை கொடைக்கானல் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் இருக்கும் 1வது கொண்டை ஊசி வளைவில் இவர்களது கார் சென்ற சமயம் திடீரென விவேக்சர்மாவின் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் பாய்ந்தது.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் காரில் சிக்கியவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளத்தில் விழுந்த அவர்களது காரும் கிரேன் இயந்திரம் மூலமாக மீட்கப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.