பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தொழிலதிபர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூருக்கு தனது நண்பர்களான அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் வின்சென்ட் பாபு, பெரம்பூரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் போன்றோருடன் தொழில் சம்பந்தமாக கோவைக்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் வேலையை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களது கார் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் அருகே வந்து கொண்டிருக்கும்போது, பனிமூட்டம் காரணமாக அந்த காரை ஓட்டி சென்ற வின்சென்ட் நிலை தடுமாறியதால் கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி அங்கிருந்த மரத்தில் பலமாக மோதி விட்டது. இந்த விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் பள்ளத்தில் பனி மூட்டத்தில் இருந்த காரை யாரும் பார்க்கவில்லை. இதனால் உயிருக்கு போராடும் நிலைமையில் இருந்த வின்சென்ட் பாபு மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து நீண்ட நேரத்திற்குப் பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் இருந்த பாலசுப்பிரமணியன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.