சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் தீவிரமாக சிகிக்சை பெற்று வருகிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் லயோலா மற்றும் நளினிம்மா ஆகிய 2 திருநங்கைகளும் கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். இந்த காரை ஓட்டுனர் பிரவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கணவாய் அருகாமையில் கார் வந்து கொண்டிருக்கும் போது கால்நடை விலங்கு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் கால்நடை விலங்கு மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அந்த சமயம் மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த 2 பேருக்கும் காயமடைந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கிய 3 பேரையும் கைப்பற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு திருநங்கைகள் 2 பேரும் முதலுதவி பெற்று வேறு ஒரு காரின் மூலமாக அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்பின் டிரைவர் பிரவின் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளனர். இது பற்றி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.