40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களான கோபிநாத், கௌசிக், கார்த்திக் போன்றோருடன் தொழில் தொடர்பாக பொள்ளாச்சிக்கு சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் 4 பேரும் சிறிது நேரம் வெளியே சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நள்ளிரவு 2 மணி அளவில் சங்கம்பாளையம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு அங்குள்ள 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக உடைந்து விட்டது.
மேலும் சம்பவ இடத்திலேயே ஸ்ரீகாந்த் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் விழுந்த காரின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கௌசிக், கார்த்திக் மற்றும் கோபிநாத் ஆகிய 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த ஸ்ரீகாந்தின் உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.