கார் ஒன்று டிராம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய கர்ப்பிணி சிறுமி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலுள்ள Wolverhampton என்னும் பகுதியில் கடந்த புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சில்வர் நிற Vauxhall கார் ஓன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த டிராம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த 16 வயது சிறுவனும் அதன் பின் இருக்கையில் இருந்த 17 வயது கர்ப்பிணி சிறுமியும் பலத்த காயம் அடைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கர்ப்பிணி சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த சிறுவன் சிகிச்சைக்கு பின் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.