மாடு குறுக்கே வந்ததால் மின்கம்பத்தின் மீது மோதி கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் திருச்சிக்கு சென்று உள்ளார். இவரை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு கார் டிரைவரான சிவகுமார் என்பவர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது சாலையில் குறுக்கே மாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக சிவகுமார் காரை இடது புறமாக திருப்பியுள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் மின்கம்பத்தின் மீது மோதி நின்று விட்டது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக சிவகுமார் காயமின்றி உயிர் தப்பி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.