கொலம்பியாவில் இராணுவத்தளத்தில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 36 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் அரச படை மற்றும் தேசிய விடுதலை இராணுவம் என்ற அமைப்பினருக்கிடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கிளர்ச்சியாளர்களும் ராணுவத்தினரிடம் மோதி வருகிறார்கள். இந்நிலையில் குகுடா என்ற நகரத்தில் இருக்கும் ராணுவ தளத்தில் இராணுவ ஆடை அணிந்து ஒரு வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளார்கள்.
அவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு உடனடியாக தப்பியோடிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த வாகனத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறிவிட்டது. இதில் 36 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்பு அவர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலம்பியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி டிகோ மலோனா இத்தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் தான் நடத்தியிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.