நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவபுரம் பகுதியில் பாலாஜி என்ற கால் டாக்சி டிரைவர் வசித்து வருகிறார். இவர் ஆலந்தூர்-வேளச்சேரி ரோட்டில் இருக்கும் கோவில் சுவரை ஒட்டி தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பரங்கிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்களும், பரங்கிமலை காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து விட்டது. மேலும் இந்த விபத்தில் பூமிக்கடியில் செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கேபிளும் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் பழுதடைந்த கேபிளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.