பழிவாங்கும் விதமாக கார் டிரைவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி புதுநகர் பகுதியில் கண்ணதாசன் என்ற கார் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு இரவு 9 மணி அளவில் கண்ணதாசனை அவனது பெரியப்பா மகன் குமார் என்பவர் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து இவர்கள் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணதாசனை சுற்றிவளைத்து விட்டனர். அதன்பின் அவர்கள் கத்தியால் கண்ணதாசனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் படுகாயமடைந்த கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெ.ஜெ நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி மாதம் பிரகதீஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது கொலைக்கு பழிவாங்கும் விதமாக கண்ணதாசனை மர்ம கும்பல் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணதாசனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.