இயங்கிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கார் கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டியை நோக்கி 12 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் என்ஜினில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து உள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து வெளியேறி விட்டனர். இவ்வாறு தீ மளமளவென பற்றி எரிந்ததால் அப்பகுதி கரும்புகையால் சூழ்ந்து விட்டது.
இதனை அடுத்து டாக்டரும் அங்கு நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் எரிந்த தீயை அணைத்து விட்டனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, அபாயகரமான கல்லடி மலைப்பாதையில் புதிதாக பயணிப்பவர்கள் காரில் கிளட்சை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றும், என்ஜின் அதிகமாக சூடாகி இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.