கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜீனியரான நரேன் மற்றும் சுரேன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நரேன் மற்றும் சுரேன் ஆகிய இருவரும் தனது நண்பர்களான நவீன், கார்த்திக் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 பேரும் ஒரே காரில் கொடைக்கானல் சென்று விட்டு தங்கி சுற்றுலா தலங்களை ரசித்தனர். அதன்பின் கொடைக்கானலிலிருந்து 5 பேரும் காரில் மீண்டும் ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் தாசநாய்க்கண் பட்டி பகுதியில் கார் வந்து கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் உள்ளிருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் காரினுள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியாத காரணத்தால் அவர்கள் அலங்கியம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 5 பேரையும் மீட்டனர். அப்போது நரேன் மற்றும் சுரேன் ஆகிய இருவரும் இறந்து கிடந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் காயமடைந்த மற்ற 3 பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் நரேன் மற்றும் சுரேன் ஆகிய ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.