கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கண்டெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் அரவலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் வேலை முடிந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் தெற்கு வள்ளியூர் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சுப்பிரமணியனின் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து பணகுடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுப்பிரமணியனின் உடலை உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்த முகமது பஷீர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.