இனி வரக்கூடிய காலம் தான் மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், அதை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து பல சிரமங்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பிரச்னையை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதை கண்டுபிடிப்பதில், உலக நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிலும், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இறுதி நிலையை கிட்டத்தட்ட எட்டிவிட்டன. இந்நிலையில் உலக அளவில் தடுப்பூசி பரவலாக கிடைப்பதற்கு முன் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
9 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழந்த காரணத்தால், தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய சவால் நிறைந்த கட்டாயத்தில் உலக மக்கள் உள்ளனர் என்றும், பாதிப்பு மென்மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றால், தடுப்பூசியை அனைவருக்கும் வினியோகிப்பது கடினம் எனவே தடுப்பூசி வரும்வரை மிக மிக எச்சரிக்கையாக மக்கள் இருக்க வேண்டிய காலகட்டம் இது என்று எச்சரித்துள்ளது.