தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஸ்டேட் பாங்க் தெருவில் தனக்கோட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாபு தனது காரில் காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கம்பெனி பேருந்தும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி பாபு படுகாயமடைந்துள்ளார்.
இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பாபுவை மீட்க போராடியும் காப்பாற்ற முடியாததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.