மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்து வர சென்ற காரின் பின் பக்க டயர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயவேலு. இவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை ஜெயவேலு மணமக்களை மறுவீட்டிற்கு அழைப்பதற்காக தனது உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார். அந்த காரில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். திருவண்ணாமலை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்து உள்ளது.
இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஜெகதீஸ்வரி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த சிறுவர்கள் உட்பட 10 பேரும் காயமடைந்தனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆறுபடையப்பன் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.