நடிகர் வடிவேலு காமெடி காட்சியை போல வாகனத்தை ஓட்டி பார்த்து விட்டு வாங்குகிறேன் என்று கூறி இருவர் பைக்கை திருடிச் சென்ற சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்ய நினைத்துள்ளார். அதற்காக விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த இருவர் இளைஞரை தொடர்பு கொண்டு அவரது இரு சக்கர வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதை நம்பி அவர்கள் இருவரையும் தான் இருக்கும் பகுதிக்கு வாகனத்தை பார்க்க அழைத்துள்ளார்.
அங்கு வந்த இருவரும் குறிப்பிட்ட அந்த வாகனத்தை ஓட்டி பார்த்து விட்டு தான் வாங்குவோம் என்று வாகனத்தின் சாவியை கேட்டுள்ளனர். நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் இன்ஜினியர் மாணவரும் தனது இருசக்கர வாகன சாவியை கொடுத்துள்ளார். சிறிது தூரம் ஓடி பார்த்துவிட்டு திரும்ப வரும்படி சொல்லியுள்ளார். சாவியை வாங்கி இருவரும் அதை எடுத்துக் கொண்டு ஓடுவது போல் நடித்து வாகனத்தை ஓட்டிச் சென்று உள்ளனர்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வராத போது தன் வாகனத்தை பறிகொடுத்த உணர்ந்த அந்த இன்ஜினியரிங் மாணவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருடப்பட்ட வாகனம் சென்ற வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நடிகர் வடிவேலு பட பாணியில் ஓட்டி பார்த்து தான் வாங்குவேன் என்று கூறி வாகனத்தை ஆட்டையை போட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.