காருக்குள் இருந்த டீக்கடைக்காரர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கேயம்-கோவை சாலையில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. எனவே மது பழக்கத்திலிருந்து விடுபட மகேந்திரன் மறுவாழ்வு இல்லத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின்னர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நிலையில் மகேந்திரன் காரில் வெளியே சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி மகேந்திரனின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது விரைவில் வீட்டிற்கு வந்து விடுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் மகேந்திரன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். இந்நிலையில் காங்கேயம்-தாராபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு காரில் மகேந்திரன் மயங்கிய நிலையில் கிடப்பதாக அருகிலிருந்தவர்கள் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் கண்ணாடிகள் உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மகேந்திரன் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைபார்த்த காவல்துறையினர் மகேந்திரனை மீட்டு காங்கேயம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மகேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது அருந்திய போது கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்ததால் மூச்சுத் திணறி மகேந்திரன் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.