இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீது மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்றதால் அமெரிக்க அரசு வழக்கு பதிந்துள்ளது
உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்கா தொற்று பரவலை தொடர்ந்து அதிக அளவு பாதிக்கப்பட்டு பல உயிர்களை இழந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், சனிடைசர் திரவம், பாதுகாப்பு கருவிகள், நோயாளிகளுக்கான செயற்கை சுவாச கருவிகள் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் இதனை நன்கொடை அளிக்கலாம் அல்லது விற்பனையும் செய்யலாம் என அமெரிக்கா வேண்டுகோள் வைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் இந்த பொருட்களை எல்லாம் பெரிய அளவில் பதுக்கி வைத்து ஆன்லைன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வந்துள்ளார்.
தற்போது அவர் வசமாக அமெரிக்க அரசிடம் மாட்டி விட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த அமர்தீப் சிங் கொரோனா தொற்றை தடுக்க முன் வரிசையில் நின்று போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கான சுய பாதுகாப்பு கருவிகளையும், பல மருத்துவ பொருட்களையும், உயிர் காக்கும் சிகிச்சையில் அத்தியாவசிய தேவையாக இருக்கும் செயற்கை சுவாச கருவிகளையும் நியூயார்க் நகரில் அமைந்துள்ள குடவுனில் டன் கணக்கில் பதுக்கி வைத்துள்ளார்.
பதுக்கி வைத்த அப்பொருட்களை இணையதளங்கள் மூலம் நாசாவ் கவுண்டி ஸ்டோர்களிலும் அநியாயமாக அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இது அமெரிக்க அரசின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து அமர்தீப் போலீசில் சிக்கியுள்ளார். அவர் மீது சென்டிரல் இஸ்லிப் பகுதியில் இருக்கும் மத்திய கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை புரூக்ளின் அரசு வக்கீல் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அமர்தீப் சிங் மீது பாதுகாப்பு உற்பத்தி சட்டம் 1950 மீறி அத்தியாவசிய மருத்துவ கருவிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை கிடைக்கக்கூடும். அடுத்த வாரம் அரசு அதிகாரிகள் முன்னிலையில் அவர் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.