அமெரிக்கா மாநிலமான மிசோரியில் கொரோனா பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சீனாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்புகளை உலக நாடுகளுக்கு மறைத்தல், கொரோனா பற்றிய தகவல்களை அறிந்த நபர்களை கைது செய்தல், உலக நாடுகள் பலவற்றிற்கு பொருளாதார பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்ட சீனாவை எதிர்த்து அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் அரசு சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை பரப்பிய சீனாவை எதிர்த்து முதல் வழக்கை அமெரிக்காவில் இருக்கும் மிசோரி மாநிலம் தொடர்ந்துள்ளது. மிசோரியில் இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்மிட் சீன அரசிற்கும் , ஆளும் கம்யூனிஸ்ட் அரசிற்கும் , அதிகாரிகளுக்கும் எதிராக வழக்கை தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், ”சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி அடுத்தடுத்து பரவிய வாரங்களில் சொந்த மக்களுக்கே உண்மைத் தகவலை மறைத்து ஏமாற்றிவிட்டனர். முக்கியமான உண்மைகளை மறைத்தது மட்டுமன்றி , உண்மைகளை அறிந்தவர்களைக் கைதும் செய்தனர்.
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்ற உண்மையையும் வெளியிடாமல் சீன அதிகாரிகள் மறைத்துவிட்டார்கள் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைவார்கள் என்பதை அறிந்தே மருத்துவ ஆய்வு அறிக்கைகளைஅழித்து உள்ளனர். மேலும், மருத்துவர்களுக்கு தேவையான பிபிஇ பாதுகாப்பு உடைகளையும் அதிக அளவில் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய தயாராக வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களுக்கு நோய், பொருளாதாரப் பாதிப்பு, உயிரிழப்புகளைக் கொடுத்தது. மிசோரியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் அனாதையாகிவிட்டார்கள். சிறுதொழில்கள் முடக்கப்பட்டு பலர் உணவுக்காகவும், பணத்துக்காகவும் கையேந்துகின்றனர். கொரோனா தொற்று பற்றி நல்ல தெளிவு இருந்தும் அதை சீன அதிகாரிகள் மறைத்து விட்டார்கள்.
சீனாவின் புத்தாண்டுக்கு 1.75 லட்சம் மக்களை வுகானிலிருந்து உலகத்தின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல சீன அரசு அனுமதித்துள்ளது. கொரோனா பரவல் அறிந்தே மக்களை பல்வேறு நாட்டிற்கு பயணிக்க சீனா அனுமதித்துள்ளது. பொதுமக்களுக்கு தொல்லை செய்தது, ஆபத்தை கொடுத்தது , பொருளாதார பாதிப்பு , உயிர் பலி ஆகியவற்றுக்கு சீனா இழப்பீடு கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ததாக அவர் கூறியுள்ளார். கடந்த வாரம் எம்.பி.க்கள் கிறிஸ் ஸ்மித், ரான் ரைட் ஆகியோர் சீனாவுக்கு எதிராக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.