Categories
மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், காலணி மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.

பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாகவும் அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கைக் கோரி, கோவை காட்டூர் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் நேருதாஸ் புகார் அளித்திருந்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நேருதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல், ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல் துறையிடம் புகார் கொடுத்து 15 நாள்கள் முடிவதற்கு முன்னதாகவே மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தைத் தான் மனுதாரர்கள் அணுகியிருக்க வேண்டும் என மனுதாரருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து நடிகர் ரஜினிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். அதனால், மனுக்களை திரும்பப் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |