மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த மனுவை வாபஸ் பெற்று கொண்டதையடுத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “ஜெயலலிதா சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், தற்போது அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல். மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித் துறையினர், அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளதாகவும், சோதனையின் அடிப்படையில் வருமான வரித்துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடந்து வரும் விசாரணை முடிவடையவில்லை. பல விசாரணைகளில் சம்பந்தப்பட்டுள்ள அந்த வீட்டை, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்ற முடியாது எனவும், வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதியைச் சேர்ந்த 108 பேர் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் ஜூன் 8 ல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், நினைவு இல்லமாக மாற்ற அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்படவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், அரசுக்கு இ-மெயிலில் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்கும்படி தாக்கல் செய்துள்ள மனுவை எப்படி விசாரணைக்கு ஏற்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.